அதிகனமழை எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை
அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நீலகிரி, கோவை உள்பட 4 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையின் 8 குழுக்கள் தயார்நிலையில் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரையிலான நிலவரப்படி, 24 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட 94 சதவீதம் அதிகம்.
நாளை (வெள்ளிக்கிழமை) வரை சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகனமழை எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில், அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் அவரவர் தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
பேரிடர் மீட்பு குழுக்கள் தயார்நிலை
மேலும் கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இதுமட்டுமின்றி பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் பொக்லைன் எந்திரங்கள், மரம் அறுக்கும் எந்திரம் உள்பட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும் நிவாரண முகாம்களையும் தயார்நிலையில் வைக்க கலெக்டர்களுக்கு சொல்லப்பட்டு உள்ளது.
கனமழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் கன்னியாகுமரியிலும், 2 குழுக்கள் நீலகிரியிலும் தயார்நிலையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன.
கட்டுப்பாட்டு மையம்
பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணிநேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. இதனை 1077, 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், 9445869848 என்ற வாட்ஸ்-அப் மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.