திருத்தணி அரசு கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு - மாணவர்களுக்கு அறிவுரை


திருத்தணி அரசு கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு - மாணவர்களுக்கு அறிவுரை
x

திருத்தணியில் உள்ள அரசு கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் ஆசிரியர்கள் மாணவா்களுக்கு அறிவுரை கூறினர்.

திருவள்ளூர்

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மேதினிபுரம் பகுதியில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி கல்லூரி வளாகத்தில் முதலாமாண்டு படிக்கும் 2 மாணவர்களை, 3-ம் ஆண்டு படிக்கும் ஒருவர் மற்றும் மர்ம நபர்கள் 4 பேர் கத்தியுடன் வந்து, வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதனால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கல்லூரி திறக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று கல்லூரி நுழைவு வாயிலில் கல்லூரி முதல்வர் பூரணச்சந்திரன், பேராசிரியர்கள், மற்றும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் கல்லூரிக்கு வந்த மாணவர்களை நிறுத்தி அடையாள அட்டை உள்ளதா, எந்த பாடப்பிரிவுகளில் படிக்கின்றனர் என்ற விவரம் கேட்டறிந்து பின்னர் மாணவர்களை கல்லூரிக்கு உள்ளே அனுமதித்தனர்.

இதுதவிர, போலீசார் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, கல்லூரியில் அனைத்து மாணவர்களும் நல்லொழுக்கத்துடன் படிப்பில் கவனம் செலுத்தி கல்வி கற்க வேண்டும் என அறிவுறுத்தினர்.


Next Story