மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்
வால்பாறையில் தொடர் மழை பெய்ததால், மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
வால்பாறை
வால்பாறையில் தொடர் மழை பெய்ததால், மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
கடும் பனிமூட்டம்
வால்பாறையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. நகர் பகுதியில் மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. ஆனால் அட்டகட்டிக்கு கீழ் பகுதியில் உள்ள வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையிலும், அதை சுற்றியுள்ள வனப்பகுதியிலும் மழை பெய்யாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் பட்டப்பகலில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகினர்.
சோலையாறு அணை
அவர்கள் வாகனங்களில் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றதை காண முடிந்தது. சிலர், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு, பனிமூட்டம் விலகியதும் புறப்பட்டு சென்றனர்.
அட்டகட்டி பகுதியில் இருந்து பார்க்கும்போது மலைப்பாதை, வனப்பகுதி மற்றும் ஆழியாறு அணை காட்சி முனை முழுவதும் பனிமூட்டம் நிலவி இருந்தது. இது சுற்றுலா பயணிகளின் கண்களை கவர்ந்தது.
மேலும் சோலையாறு சுங்கம் ஆறு, கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, வாழைத்தோட்டம் ஆறு ஆகிய அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 115 அடியை தாண்டியது. நேற்று முன்தினம் 106 அடியாக நீர்மட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.