மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - சிவ்தாஸ் மீனா


மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை  -  சிவ்தாஸ் மீனா
x

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

சென்னை,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.இந்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை. எனவே தொடர்ந்து மீட்பு பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தென் மாவட்ட மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதில் பாதிப்பு பற்றிய விவரங்கள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து புகைப்படங்கள் மூலம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கமளித்தார்.

மேலும் இந்த ஆய்வில் 4 மாவட்ட கலெக்டர்களும் காணொளி வாயிலாக பங்கேற்றனர். இதில் மழை பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள் விளக்கமளித்தனர்.

இந்த ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியதாவது ,

மக்களுக்கு செய்யப்பட்டு வரும் நிவாரணப் பணிகள், உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் என்னவாக இருக்கிறது? பால் விநியோகம், மின் இணைப்பு நிலை உட்பட அனைத்து தேவைகள் குறித்து இன்றைய ஆய்வுக் கூட்டம் நடந்தது.தென் மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்

மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 10 ஹெலிகாப்டர்கள் மூலமாக உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது. கோவை, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டது. உணவு பொட்டலங்களை ஹெலிகாப்டரில் ஏற்றி விநியோகிக்கப்பட்டது. இதுவரை, கிட்டத்தட்ட 27 டன் அளவிலான உணவு மக்களுக்கு விநியோகித்துள்ளோம் .இவ்வாறு கூறினார்.


Next Story