ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் பெரும் குளறுபடி - இன்னல்களை சந்தித்த ரசிகர்கள், பொதுமக்கள்...!


ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் பெரும் குளறுபடி - இன்னல்களை சந்தித்த ரசிகர்கள், பொதுமக்கள்...!
x
தினத்தந்தி 11 Sept 2023 11:22 AM IST (Updated: 11 Sept 2023 11:26 AM IST)
t-max-icont-min-icon

ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை,

சென்னை பனையூரில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி கடந்த மாதம் 12-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அன்று பெய்த மழையின் காரணமாக இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த மைதானத்தில் நீர் தேங்கியதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேறொரு நாளில் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் என்று ஏ.ஆர்.ரகுமான் அறிவித்தார். அதன்படி, 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வாங்கிய டிக்கெட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று மாலை ஏராளமானோர் ஈசிஆர் சாலையில் உள்ள பனையூரில் குவிந்தனர். இதனால், ஈசிஆர் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதேவேளை, கூட்டம் அதிகமாக இருந்ததால் பலர் கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்தனர். உரிய டிக்கெட்டுகள் இருந்தும் பலர் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. பெண்கள், குழந்தைகள் என பலரும் பாதிக்கப்பட்டனர். இசை நிகழ்ச்சி அரங்கில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என நிகழ்ச்சியை பார்க்க வந்து ஏமாற்றத்துடன் சென்ற ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். அதேபோல், ஈசிஆர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகனமும் நெரிசலில் சிக்கியது.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஏ.ஆர். ரகுமான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி, போக்குவரத்து நெரிசல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story