தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பொது மக்களை கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்ப அலை வீசுவதால், பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகிறார்கள். இதற்கிடையே தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும், 109 டிகிரி வரை வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில், ஒரு சில இடங்களில் மே 1-ந்தேதி (அதாவது நாளை) வரை அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக காணப்படும்.
மே 2 மற்றும் 3-ந்தேதிகளில், தமிழக வட உள் மாவட்டங்களில், சமவெளி பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும். அடுத்த 5 நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில், 39 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை (102.2 முதல் 109.4 டிகிரி வரை) பதிவாகும். மேலும் வெப்ப அலையும் வீசும்.
அதேநேரம், தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, மே 1-ந்தேதி வரை, கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
மே 2-ந்தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மே 3-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதை ஒட்டிய வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.