தமிழ்நாட்டில் 6-ம் தேதி வரை வெப்ப அலை வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழ்நாட்டில் 6-ம் தேதி வரை வெப்ப அலை வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 4 May 2024 10:01 AM IST (Updated: 4 May 2024 10:03 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலை வீச கூடும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் மே 6 ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதேவேளையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மே 7, 8 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பினை சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்தது. இதுதொடர்பான அந்த செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 06.05.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

08.05.2024 மற்றும் 09.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.




Next Story