இதயநோய் விழிப்புணர்வு பேரணி
தென்காசியில் இதயநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தென்காசி வாய்க்கால் பாலம் அருகில் இயங்கி வரும் சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில், உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மருத்துமனை நிறுவனரும், தலைவருமான டேவிட் செல்லத்துரை தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்கள் தமிழரசன், பிரிதிவிராஜ் கலந்து கொண்டனர். அன்பரசன், கவுதமி தமிழரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
தென்காசி புதிய பஸ்நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணியானது மேம்பாலம், கூலக்கடை பஜார், காசிவிசுவநாத சுவாமி கோவில், தென்காசி நகராட்சி, சந்தை பஜார் வழியாக சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் முடிவடைந்தது. கொட்டும் மழையிலும் ஏராளமான மாணவ-மாணவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் இதயநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை முழங்கியவாறு ஊர்வலமாக சென்றனர். தென்காசியில் முதன்முறையாக கரோனரி ஆஞ்சியோகிராபி, ஆஞ்சியோ பிளாஸ்ட்டி, பேஸ்மேக்கர், பெரிபெரல் ஆஞ்சியோகிராபி, பெரிபெரல் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி சிகிச்சைகள் மிகச்சிறந்த இதய நோய் மருத்துவர்களால் சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வருவதாக இதன் முதன்மை டாக்டர் தமிழரசன் தெரிவித்தார்.