பட்டாசு வெடித்த சத்தம் கேட்டு மயங்கி விழுந்த மாணவன் சாவு
திருச்செந்தூர் அருகே, விளையாடி கொண்டிருந்தபோது, பட்டாசு வெடித்த சத்தம் கேட்டு அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்த பள்ளி மாணவன் தலையில் படுகாயம் அடைந்து இறந்தான்.
ஆறுமுகநேரி:
திருச்செந்தூர் அருகே, விளையாடி கொண்டிருந்தபோது, பட்டாசு வெடித்த சத்தம் கேட்டு அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்த பள்ளி மாணவன் தலையில் படுகாயம் அடைந்து இறந்தான்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பள்ளி மாணவன்
திருச்செந்தூர் அருகே உள்ள தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவபெருமாள். இவருக்கு செல்வக்குமாரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இதில், 2-வது மகன் அஜய்குமார் (வயது 10). அங்குள்ள அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் அஜய்குமார் உள்பட 5 மாணவர்கள் நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அப்பகுதியில் பட்டாசு வெடித்த சத்தம் வந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அஜய்குமார் மயங்கி கீழே விழுந்தான்.
பரிதாப சாவு
இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அஜய்குமாரை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை அஜய்குமார் பரிதாபமாக இறந்தான்.
இதையடுத்து மாணவன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.