அரவக்குறிச்சியில் அரசு ஊழியரை பள்ளியில் வைத்து பூட்டிய தலைமை ஆசிரியை
அரவக்குறிச்சியில் அரசு ஊழியரை பள்ளியில் வைத்து பூட்டிய தலைமை ஆசிரியையால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளியின் வெளி கேட்டில் பூட்டு
அரவக்குறிச்சியில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் பள்ளி நடந்தது. பின்னர் மாலையில் வழக்கம்போல் 4.15 மணிக்கு பள்ளி முடிந்ததும் மாணவிகள் வீட்டிற்கு சென்று விட்டனர்.இந்தநிலையில் பள்ளியில் வேலை பார்க்கும் இளநிலை உதவியாளர் செல்வகதிரவன் மட்டும் பள்ளி அலுவலகத்தில் இருந்து அலுவலக வேலை பார்த்து கொண்டிருந்தார்.நேரம் அதிகமாகி விட்டதாக கூறி பள்ளியின் வெளி கேட்டின் பூட்டை பள்ளி தலைமை ஆசிரியர் உமா பூட்டி விட்டு சென்று விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தலைமை ஆசிரியர் மீண்டும் பள்ளிக்கு வந்து கேட்டை திறந்து விட்டார்.
வேலை செய்ய விடுவதில்லை
இதையடுத்து பள்ளியில் இருந்து வெளியே வந்த இளநிலை உதவியாளர் செல்வகதிரவன் நிருபர்களிடம் கூறுகையில், நான் பள்ளி வேலைகளை மாலை 6.30 மணி வரையில் பார்த்து விட்டுத்தான் கிளம்புவேன். ஆனால் இன்று (நேற்று) 5.45 மணியளவில் கேட்டை பூட்ட வேண்டும், வெளியே போகுமாறு தலைமை ஆசிரியர் என்னிடம் கூறினார்.வேலை உள்ளது என நான் கூறியபோதும், நான் உள்ளே இருக்கும்போதே வெளிகேட்டை பூட்டிவிட்டுச் சென்றார். நான் பார்க்கும் பள்ளி அலுவலக வேலைகளை என்னை பார்க்கவிடாமல் மற்ற பள்ளி ஆசிரியர்கள், எமது பள்ளி ஆசிரியர்களை வைத்து செய்து கொள்கிறார். இறுதியில் நான் வேலை பார்ப்பதில்லை எனும் தோற்றத்தை உருவாக்குகிறார். இன்று (நேற்று) எல்லை மீறி என்னை உள்ளேயே வைத்து பூட்டி விட்டார் என்றார்.
வெளியே வாருங்கள்
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் உமா கூறுகையில், பள்ளி மாலை 4.15-மணிக்கு முடிந்தாலும், அலுவலகத்தில் மாலை 5.45 மணி வரைதான் இருக்க வேண்டும். நான் பெண்ணாக இருக்கும் நிலையில் அதற்கு மேல் எப்படி அங்கு இருக்க முடியும்? வெளியே வாருங்கள் நான் பூட்டிவிட்டு செல்ல வேண்டும் என செல்வகதிரவனிடம் கூறினேன். அவர் வேலை உள்ளது என்று கூறியபடியே உள்ளே இருந்ததால் நான் வேறென்ன செய்ய முடியும். எனவே பூட்டி விட்டேன். பிறகு நானே வந்து திறந்து விட்டேன், என்றார்.