மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் - மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு


மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் - மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு
x

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட கணவாய்பட்டி கிராமத்தில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அங்கு பயிலும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தியும், அதனை அவர்கள் பெற்றோர்களிடம் தெரிவிக்க கூடாது என்று கழிவறை சுத்தம் செய்யும் மாணவர்களிடம் 10 ரூபாயும் கொடுத்து வந்துள்ளார்.

மேலும் பள்ளிக்கு சரிவர வராமல் 12-ம் வகுப்பு முடித்த பெண்ணை ரூ.3 ஆயிரத்துக்கு வேலைக்கு வைத்து அவர்களையே பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வைக்கிறார். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

மேலும் சில பள்ளி மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கி மாற்று சான்றிதழ் கொடுத்தும் அனுப்பி உள்ளார். எனவே பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் மற்றும் இவர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்திய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்ததின் காரணமாக தலைமை ஆசிரியர் 3 மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கி உள்ளார் என்று தெரிவித்தார்.

இதனை கடுமையாக கண்டித்த நீதிபதிகள், இது தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கையை ஒரு வார காலத்திற்குள் எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story