ஓடையில் தலையில்லாத மனித எலும்புக்கூடு


ஓடையில் தலையில்லாத மனித எலும்புக்கூடு
x

கொல்லங்கோடு அருகே ஒரு தனியார் நிலத்தில் ஓடையில் தலையில்லாத மனித எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு அருகே ஒரு தனியார் நிலத்தில் ஓடையில் தலையில்லாத மனித எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

மனித எலும்பு கூடு

கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை எடப்பாடு பகுதியில் கடலுக்கும் ஏ.வி.எம். கால்வாய்க்கும் இடையே தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மழைநீர் வடித்து செல்வதற்காக ஓடை அமைக்கப்பட்டுள்ளது. ஓடையில் தற்போது சிறிதளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த தண்ணீரில் நேற்று ஒரு எலும்பு கூடு கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். முதலில் அது ஏதாவது விலங்குகளின் எலும்புக்கூடாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. தொடர்ந்து அதை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து பார்வையிட்டனர். அப்போது அது மனித எலும்பு கூடு என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், மண்டை ஓட்டை காணவில்லை. மீதி பாகங்களான கை, கால், மார்பு எலும்பு, முதுகெலும்பு போன்றவை இருந்தன. ஆனால், இறந்தவர் ஆணா? பெண்ணா? என்பது தெரியவில்லை.

கொலை ெசய்யப்பட்டாரா?

தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் யாராவது காணாமல் போனார்களா? என விசாரணை நடத்தினர். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து எலும்புக்கூட்டை தார்பாயில் சுற்றி எடுத்து சென்றனர். இதை ஆய்வகத்திற்கு அனுப்பி அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.

மேலும், மர்ம நபர்கள் யாரையாவது கொலை செய்து ஆள் அடையாளம் தெரியாமல் இருக்க தலையை துண்டித்துவிட்டு ஓடையில் வீசிவிட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் ஒரு பாழடைந்த கிணற்றில் மனித எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது. அவர் யார்? என அடையாளம் கண்டுபிடிக்காத நிலையில் தற்போது மீண்டும் ஒரு எலும்பு கூடு சிக்கியிருப்பது குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story