'சிறையில் இருந்தால் மட்டுமல்ல, திரையில் இருந்தாலும் தலைவர் தான்' -கமல்ஹாசன் பேச்சு


சிறையில் இருந்தால் மட்டுமல்ல, திரையில் இருந்தாலும் தலைவர் தான் -கமல்ஹாசன் பேச்சு
x

சிறையில் இருந்தால்தான் தலைவர் என்பது இல்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான் என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ரத்ததான குழுவினை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேசினார்.

சென்னை,

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு பல்வேறு ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்ததானம் செய்து வரும் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினரை ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் ரத்ததான குழு தொடங்கப்பட்டுள்ளது.இதனை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் ஏ.ஜி.மவுரியா, மாநில செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், வினோத்குமார் உள்பட கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திரையில் இருந்தாலும் தலைவர் தான்

ரத்ததான குழுவினை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேசியதாவது:-

திரையில் நடிப்பது உள்கட்டமைப்பு என்று நினைத்துக்கொள்கின்றனர். மீண்டும் நடிக்க சென்றுவிட்டார் என்று சொல்கிறார்கள். சிறையில் இருந்தால்தான் தலைவர் என்பது இல்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான். அப்படிப்பட்ட தலைவர்களை பார்த்திருக்கிறோம். மகாத்மா காந்திக்கு சினிமா பிடிக்காது. ஆனால் அவரை திரை மூலம் பார்த்தவர்கள் அதிகம். தண்டி யாத்திரையை திரை வழியாகத்தான் நான் பார்த்தேன். தலைமுறை தாண்டி பார்த்தேன்.

என்னுடைய படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்கு வரவில்லை. அது எனக்கு கிடைத்த படிக்கட்டு. ஏறவேண்டிய மலை, பெரிய மலை. அதில் கொஞ்சம், கொஞ்சமாக நான் அடுக்கிக் கொண்டு வருகிறேன். அதில் ஏறி வந்து கொண்டு இருக்கிறேன். 40 வருடமாக அதை செய்துக்கொண்டு இருக்கிறேன். அப்போது இருந்த என்னுடைய வீரமும், வைராக்கியமும் சற்றும் குறையவில்லை. என்னுடைய படத்தில் தொடர்ந்து அரசியலும், சமூக சேவை பற்றிய விஷயங்களும் வந்துகொண்டே இருக்கும். அது காமெடி படமாக இருந்தாலும் கூட வந்துவிடும். நம்மவர் என்பது நான் மட்டுமல்ல, நீங்களும் தான்.

கடமை, கட்டாயம்

நல்லதொரு உலகத்தை சந்ததியினருக்கு விட்டுச்செல்லவேண்டியது நம்முடைய கடமை. ஏரி, குளம், நதிகளை 'பிளாட்' போட்டு விற்றால், மழை வந்தால் எங்கள் மக்கள் செத்துவிடுவார்கள் என்பதைத்தான் நியாபகப்படுத்துகிறோம். தலைமை என்ற ஒரு கட்சி வந்துவிட்டால் சலாம் போடுவதற்கு அரசாட்சி அல்ல, இது மக்களாட்சி. இதில் கேள்விகள் கேட்கப்படும். கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாகவேண்டும். மகன் கேட்கும் கேள்விகளுக்கு தந்தை பதில் சொல்லியே ஆகவேண்டும். இது கடமையும், கட்டாயமும் ஆகும்.

அரசியல் என்பது ஓட்டு எண்ணிக்கை மட்டும் இல்லை. எவ்வளவு கமிஷன் வாங்கலாம், எவ்வளவு பணக்காரன் ஆகலாம் என்பதும் இல்லை.

வள்ளல் பட்டம்

உங்களுக்கு பணத்தை பற்றி கவலைப்படாத ஒரு தலைவர் வேண்டும். நான் சொல்லும்போது யாருக்கும் அது புரியவில்லை. என்னை நடிக்க விட்டால் நான் ரூ.300 கோடி சம்பாதிப்பேன். இதை சொல்வதால் நான் மார்தட்டுகிறேன் என்று சொல்கிறார்கள். என்னுடைய கடனை எல்லாம் அடைப்பேன். என் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு முடிந்ததை கொடுப்பேன். அதற்கு பிறகு இல்லை என்றால் இல்லை என்பதை தைரியமாக சொல்வேன். எனக்கு வள்ளல் பட்டத்தில் நம்பிக்கை இல்லை. மனிதனாக இருப்பது போதுமானது.

என்னைவிட அரசியலை சிறப்பாக யாராலும் செய்துவிட முடியாது. அவர்களிடம் மேடை மட்டுமே உள்ளது. என்னிடம் தான் தொழில்நுட்பம் இருக்கிறது. திரை உலகம் என்பது எனக்கு அடுத்த கட்டமாகத்தான் தெரிகிறது. படம் காண்பித்து அதன் மூலம் மக்களுக்கு எடுத்துச்செல்ல முடியும் என்றால் அதையும் நான் செய்ய தயாராக இருக்கிறேன். செலவு செய்யும் பணத்தை எல்லாம் வருமானத்துக்கு தெரிந்து தான் செய்கிறேன். இதனால் என்னை யாரும் மிரட்ட முடியாது. என் அரசியல் பேச்சுக்கள் காரமாக உள்ளது என்று வேண்டுமானால், என்னை மிராட்டலாம். நேர்மை என்பது விலை உயர்ந்தது. அது அனைவராலும் முடியாது. அப்படி இருந்து பாருங்கள், பழக்கமாகிவிடும். நற்பணி தான் நம் அரசியல். அவர்களுக்கு அது வியாபாரம். நமக்கு அது கடமை.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story