மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
காந்திபுரத்தில் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்.
கோவை
கோவை காந்திபுரத்தில் ஆர்.வி.ரவுண்டானா பகுதியில் உள்ள மின்கம்பத்தின் மீது நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏறினார். மின்கம்பத்தின் உயரத்துக்கு சென்றதும் திடீரென அவர் மேலே இருந்து கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரை கீழே இறங்கும் படி அறிவுறுத்தினர். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்து மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்தார். திடீரென அந்த நபர் உயர்அழுத்த மின்கம்பியை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காட்டூர் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைனா மஜ்கி (வயது 48) என்பதும், இவர் சேலத்தில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் கட்டிட வேலைக்காக கோவை வந்த பைனா மஜ்கி, குடும்ப பிரச்சினை காரணமாக மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்விடுத்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இறந்ததும் தெரியவந்துள்ளது.