பெங்களூரு வியாபாரியிடம் மோசடி செய்த பெண் உள்பட 8 பேர் கைது


பெங்களூரு வியாபாரியிடம் மோசடி செய்த பெண் உள்பட 8 பேர் கைது
x

பெங்களூரு வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒரு பெண் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

காட்பாடி

காட்பாடியில் பெங்களூரு வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒரு பெண் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.7.40 லட்சம் ரொக்கம், 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் சார்பில் கூறப்படுவதாவது;

நூதன முறையில் மோசடி

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் பர்வேஷ் அகமது (வயது53). இவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில் மூலம் காட்பாடியை சேர்ந்த சங்கர் என்பவரும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சங்கரிடம் பொருட்களை வாங்க பர்வேஷ் அகமது தனது காரில் நண்பர் மொகஜித் கான் உள்பட 3 பேருடன் கடந்த 7-ந் தேதி பெங்களூருவில் இருந்து காட்பாடிக்கு வந்து சங்கரை சந்தித்தார்.

அப்போது, திருவலத்தில் உள்ள குடோனில் பொருட்கள் இருக்கின்றன, அங்கு செல்லலாம் என கூறி சங்கர் தனது காரிலேயே பர்வேஷ் அகமது மற்றும் மொகஜித்கான் ஆகியோரை அழைத்துச் சென்றார். அப்போது பர்வேஷ்அகமது, காரில் வைத்து இருந்த ரூ.3 லட்சம் மற்றும் ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளை சங்கரிடம் கொடுத்தார்.

தப்பி சென்றனர்

தொடர்ந்து அம்முண்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் உள்பட 4 பேர் திடீரென காரை வழிமறித்தனர்.

காரில் இருந்த பர்வேஷ்அகமது, மொகஜித்கான் ஆகியோரை அவர்கள் கீழே இறங்கும்படி மிரட்டினர்.பின்னர் சங்கரிடம் விசாரணை நடத்துவது போல பேசிய அவர்கள் திடீரென காரில் ஏறி தப்பி சென்றனர்.

இது குறித்து பர்வேஷ் அகமது காட்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் போலீசார் விருதம்பட்டு பாலற்று பாலம் அருகே நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர் பர்வேஷ் அகமதுவிடம் பணத்தை பறித்து சென்ற சங்கர் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் வேலூர் நகரில் காரில் சுற்றி திரிவதாக கூறியுள்ளனர்.

8 பேர் கைது

இதை தொடர்ந்து நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடந்தது. இந்த சோதனையின் மூலம் மோசடி கும்பலை சேர்ந்த சென்னையை சேர்ந்த ராமன் மகன் முருகன் (36), வேலூரை சேர்ந்த ஜேம்ஸ் மகன் பென்ராஜ் (69), சீனிவாசன் (32), சிவா (32), சந்தோஷ் (19), சங்கர் (52), ராணிப்பேட்டையை சேர்ந்த மணிவண்ணன் (57) ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கோபால் மனைவி ஆதிலட்சுமி (29) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 33 செல்போன்கள், 4 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் குறித்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story