தமிழக கடல் பகுதி வழியாக கஞ்சா கடத்தி செல்லப்பட்டதா?
தமிழக கடல் பகுதி வழியாக கஞ்சா கடத்தி செல்லப்பட்டதா? என விசாரணை நடந்து வருகிறது.
ராமேசுவரம்,
இலங்கை தலைமன்னார் அருகே உள்ள மன்னார் இலுப்புகடவை கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் ஏராளமான பார்சல்கள் கரை ஒதுங்கி கிடந்தன. இந்த பார்சல்களை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 42 பார்சல்களில் 96 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சா பார்சல்கள் அனைத்தும் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தல்காரர்கள் படகு மூலம் கடத்தி கொண்டு வந்திருக்கலாம் என்றும், இலங்கை கடற்படைக்கு பயந்து கடத்தல்காரர்கள் கஞ்சா பார்சல்களை கடற்கரையில் வீசிவிட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கஞ்சா பார்சல்களை கைப்பற்றி இலங்கை கடற்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த தகவல் ராமேசுவரத்தில் உள்ள உளவுத்துறை போலீசருக்கும் கிடைத்துள்ளதை தொடர்ந்து ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக கடத்தல்காரர்கள் மூலம் இந்த கஞ்சா பார்சல்கள் கடத்தி செல்லப்பட்டதா? என்பது குறித்தும், ஏற்கனவே கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கண்காணித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.