தமிழக கட்சிகள் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சி - ராமதாஸ்


தமிழக கட்சிகள் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சி - ராமதாஸ்
x

அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும் என ராமதாஸ் பேசினார்.

திண்டிவனம்,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

"தமிழக கட்சிகள் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான். இதைப்பற்றி பேச தகுதியான கட்சி பா.ம.க.தான். கடந்த 44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பா.ம.க. போராடிவருகிறது. ராஜாஜி, ஓமந்தூராரும் மதுவிலக்கை சென்னை மாகாணத்தில் கொண்டு வந்தனர். இதை தி.மு.க.ரத்து செய்தபோது கொட்டும் மழையில் 94 வயதில் ராஜாஜி , கருணாநிதி வீட்டுக்கே சென்று மது விலக்கை தொடரவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனாலும் மது விலக்கை ரத்து செய்துவிட்டு இன்று தி.மு.கவினர் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள் .

35 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான போராட்டங்களை பா.ம.க.நடத்தியுள்ளது. டாஸ்மாக் திறந்தபோது 7,200 கடைகளை 4,800 ஆக குறைத்தது பா.ம.க.தான். இதற்கான சட்டப்போராட்டங்களை பா.ம.க.தான் செய்தது. காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 மணி நேரம் கடைகள் திறக்கப்பட்டதை 10 மணி நேரமாக குறைத்தது பா.ம.க. தான். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்கு என பா.ம.க. அறிவித்த பின்பே மற்ற கட்சிகள் வலியுறுத்த தொடங்கியது. அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story