மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் - ஓ.பன்னீர்செல்வம்


மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் - ஓ.பன்னீர்செல்வம்
x

மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஓணம் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

திருவோணம் என்றழைக்கப்படும் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அழித்திட வாமன அவதாரம் எடுத்த திருமால், தனக்கு மூன்று அடி மண் வேண்டும் என்று கேட்டு, விண்ணை ஒரு காலாலும், மண்ணை ஒரு காலாலும் அளந்து மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து மகாபலியின் ஆணவத்தை அடக்கியதோடு, அந்த மன்னனின் விருப்பத்திற்கிணங்க, ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் அவர், தம் நாட்டு மக்களை வந்து காணும்படியாக அருள் புரிந்தார். மக்களைக் காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக மலையாள மொழி பேசும் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

அனைத்துத் தரப்பு மக்களும் சாதி, மத பேதங்களை களைந்து, உயர்வு, தாழ்வு உணர்வுகளுக்கு இடங்கொடாது, அகம்பாவம், அகந்தை, ஆணவம் போன்றவற்றை அகற்றி சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் கொண்டாடப்படும் ஓணம் திருநாளில், ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story