வீட்டில் தூக்குப்போட்டு பிளஸ்-1 மாணவி தற்கொலை


வீட்டில் தூக்குப்போட்டு பிளஸ்-1 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் ஆசிரியை திட்டியதால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடியில் ஆசிரியை திட்டியதால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிளஸ்-1 மாணவி

தென்காசி மாவட்டம் புளியங்குடி பிச்சாண்டி கீழத்தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகள் முனீஸ்வரி என்ற முகிலா (வயது 16). இவர் புளியங்குடியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பசாமி இறந்துவிட்டார். இதனால் மாரியம்மாள் கூலிவேலைக்கு சென்று தனது மகளை கவனித்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற முனீஸ்வரி மாலையில் வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த அவர் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று வீடு திரும்பிய மாரியம்மாள் தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் அங்கு திரண்டு வந்தனர்.

இதுகுறித்து உடனடியாக புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முனீஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அங்கு முனீஸ்வரி இறப்பதற்கு முன் எழுதி வைத்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.

அதில், நான் பள்ளிக்கு தாமதமாக சென்றதால் ஆசிரியை என்னை திட்டி வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தார். இதனால் மனமுடைந்து நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு

மாணவி முனீஸ்வரி தற்கொலையை தொடர்ந்து நேற்று அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பள்ளியின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.


Next Story