தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
பழனி அரசு ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இவர்களில் வெளிநோயாளிகளாக மட்டும் தினமும் 200 பேர் வரை சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் வெளிநோயாளிகள் பிரிவு பகுதியில் நோயாளிகள் கூட்டம் எப்போதும் இருக்கும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் வெளிநோயாளிகள் பிரிவு அருகே உள்ள மரத்தில் ஒருவர் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். நள்ளிரவு நேரம் என்பதால் யாரும் அவரை கவனிக்கவில்லை. பின்னர் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மின்விளக்குகளை அணைப்பதற்காக வந்த காவலாளி மரத்தில் ஒருவர் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
கார் டிரைவர்
உடனே ஆஸ்பத்திரி நிர்வாகத்தினருக்கு அவர் தகவல் கொடுத்தார். அவர்கள் பழனி டவுன் போலிசில் இதுகுறித்து புகார் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இறந்தவர் யார்? என்று தெரியாததால் அவருடைய சட்டைப்பையில் ஆவணங்கள் எதுவும் இருக்கிறதா? என்று சோதனையிட்டனர்.
அப்போது சட்டைப்பையில் இருந்த செல்போன் போலீசாருக்கு கிடைத்தது. அதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தவரின் செல்போன் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் மகன் சரவணபாரதி (வயது 36) என்பது தெரியவந்தது.
பரபரப்பு
மேலும் கார் டிரைவரான அவருக்கு கடன் தொல்லை இருப்பதும், நேற்று முன்தினம் பழனிக்கு வந்த அவர் நள்ளிரவு நேரத்தில் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஆனால் அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.