அரசு பஸ்சில் தவறவிட்ட ரூ.43 ஆயிரம் லாரி டிரைவரிடம் ஒப்படைப்பு
திண்டிவனத்தில் அரசு பஸ்சில் தவறவிட்ட ரூ.43 ஆயிரம் லாரி டிரைவரிடம் ஒப்படைப்பு காலணி வியாபாரியின் நேர்மைக்கு பாராட்டு
திண்டிவனம்
சேலம் மாவட்டம் புளியங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அன்பரசு(வயது 44) டிரைவரான இவர் தனது லாரியை பராமரிப்புக்காக சேலம் தாசநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனையில் விட்டு விட்டு வாழப்பாடியில் இருந்து தலைவாசலுக்கு செல்வதற்காக கள்ளக்குறிச்சி அரசு பஸ்சில் பயணம் செய்தார். மதுபோதையில் இருந்த அன்பரசு கையில் பை ஒன்றை வைத்திருந்தார். இதே பஸ்சில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த செருப்பு வியாபாரி அபீப் சேட்டு(46) என்பவரும் பயணம் செய்தார். பஸ் ஆத்தூரில் நின்றபோது இயற்கை உபாதைக்கு செல்வதற்காக கீழே இறங்கி அன்பரசு பஸ்சை தவற விட்டு விட்டு வேறு பஸ்சில் ஏறி சொந்த ஊருக்கு சென்றார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வந்தவுடன் பஸ்சில் இருந்து இறங்கிய அபீப் சேட்டுவின் காலில் பை ஒன்று தட்டுபட்டது. அதை எடுத்து பார்த்தபோது உள்ளே வங்கி கணக்கு புத்தகங்கள் இருந்ததை கண்ட அவர் அதை மறுநாள் காலை உரியவரிடம் ஒப்படைத்துவிடலாம் என நினைத்து அங்கிருந்து வேறு பஸ்சில் திண்டிவனம் வந்தார். வீ்ட்டுக்கு சென்று அந்த பை முழுவதுமாக சோதனை செய்தபோது உள்ளே வங்கி கணக்கு புத்தகங்கள், காசோலை புத்தகம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஒரு பில் புத்தகத்தில் ரூ.43,000 ரொக்கம் ஆகியவை இருந்ததை கண்ட அபீப் சேட்டு இதுபற்றி தனது தந்தை அன்வர் பாஷாவிடம் தெரிவித்தார்.
பின்னர் இவர் தனது நண்பரான பிரம்மதேசம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விநாயகத்தை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தார். அவரது அறிவுரையின் பேரில் தந்தை, மகன் இருவரும் பணத்துடன் கூடிய பையுடன் திண்டிவனம் நகர போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அதை தவற விரட்ட லாரி டிரைவர் அன்பரசனையும் வரவழைத்தனர். உடனே அவரும் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தார்.
இதையடுத்து திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி முன்னிலையில் பஸ்சில் தவறவிட்ட பணத்துடன் கூடிய பையை லாரி டிரைவர் அன்பரசனிடம் ஒப்படைத்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர் அபீப்சேட்டு அவரது தந்தை ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். பஸ்சில் லாரி டிரைவர் தவற விட்ட பையை போலீசார் உதவியுடன் ஒப்படைத்த செருப்பு வியாபாரியின் நேர்மையை பொதுமக்கள் பாராட்டினர்.