பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பழனி முருகன் கோவில் தலைமை அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் நூருல்ஹூதா தலைமை தாங்கினார். இதில், ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
பழனி முருகன் கோவில் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம், அன்னதானக்கூடம் ஆகிய இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை. எனவே பாதுகாவலர் ஒருவருடன் மாற்றுத்திறனாளிகள் செல்ல அனுமதிக்க வேண்டும். பழனி கோவிலின் உபகோவில்களான திருஆவினன்குடி, மாரியம்மன் கோவில், குழந்தை வேலப்பர் கோவில் மற்றும் கோவில் சார்ந்த கல்வி நிறுவனங்களில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் ஏற்படுத்த வேண்டும். பழனியில் திறக்கப்படாமல் உள்ள மனநல காப்பகத்தை உடனடியாக திறக்க வேண்டும். பழனி சிறுவர் பூங்காவில் வீல்சேர் வசதி செய்ய வேண்டும். மின்இழுவை ரெயில்நிலையம், அன்னதானக்கூடத்தில் 'லிப்ட்' வசதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கோரிக்கைகள் தொடர்பான மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கோவில் நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த போராட்டம் மதியம் வரை நீடித்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர். பின்னர் பழனி போலீசார் மற்றும் கோவில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.