வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி கைவரிசை: மூதாட்டியிடம் நூதன முறையில் சங்கிலி பறித்த திருடன்
வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் சங்கிலி பறித்த திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி அடுத்த கோவர்த்தனகிரி அரவிந்த் நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 77). இவர் நேற்று மதியம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் முனியம்மாளிடம் பேச்சு கொடுத்து கழுத்தில் சங்கிலி அணிந்து இருந்தால் கடன் தரமாட்டார்கள் என்றும், மேலும் சலுகைகள் கிடைக்காது. பென்ஷனையும் உயர்த்தி தர மாட்டார்கள் என்று கூறி உள்ளார். எனவே வங்கியில் தான் கடன் வாங்கி தருவதற்கு கழுத்தில் இருக்கும் சங்கிலியை கழற்றி மணி பர்சுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய முனியம்மாள் கழுத்தில் இருந்த 1½ பவுன் சங்கிலியை கழற்றி தான் வைத்திருந்த சிறிய பர்சில் வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் அந்த மர்ம நபர் முனியம்மாளின் கைப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த முனியம்மாள் நூதன திருட்டு குறித்து ஆவடி போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில், ஆவடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான மர்ம நபரின் உருவத்தை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.