பாதியில் கரை திரும்பிய குளச்சல் விசைப்படகு மீனவர்கள்
குளச்சல் ஆழ்கடலில் சூறைக்காற்று வீசியதால் பாதியிலேயே விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினார்கள். இதனால் போதிய மீன்கள் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
குளச்சல்:
குளச்சல் ஆழ்கடலில் சூறைக்காற்று வீசியதால் பாதியிலேயே விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினார்கள். இதனால் போதிய மீன்கள் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சூறைக்காற்று வீசியது
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளிலும் மீனவர்கள் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவார்கள். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். பைபர் படகுகள் காலையில் கடலுக்கு சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடுவது வழக்கம். தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும்.
விசைப்படகுகள் கரை திரும்பின
இந்த நிலையில் குளச்சல் ஆழ்கடல் பகுதியில் நேற்று சூறை காற்று வீசியதுடன் மழையும் பெய்தது. மேலும் போதிய மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மீனவர்கள் விசைப்படகுகளுடன் பாதியிலேயே நேற்று காலையில் கரை திரும்பினர்.
அவை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் குளச்சலில் நேற்று மீன்வரத்து வெகுவாக குறைந்தது.
இதுகுறித்து விசைப்படகு மீனவர் ஒருவர் கூறியதாவது:-
தற்போது விசைப்படகுகளில் மீன்பிடி சீசன் நன்றாக இருக்க வேண்டிய சீசனாகும்.ஆனால் ஆழ்கடல் பகுதியில் தற்போது மீன்கள் கிடைக்கவில்லை. அத்துடன் கடலில் காற்றும் வீசுகிறது. இதனால் விசைப்படகினர் கரை திரும்பி உள்ளனர் என்றார்.