குட்கா முறைகேடு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக உத்தரவு
குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
லஞ்சம் பெற்றுக்கொண்டு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க அனுமதித்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாதவராவ், சீனிவாசராவ் உள்ளிட்ட 6 பேருக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என 21 பேருக்கு எதிராக சென்னை கோர்ட்டில் சி.பி.ஐ. கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சஞ்சய்பாபா முன்னிலையில் கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற முருகன் என்பவர் இறந்து போன நிலையில் மீதமுள்ள முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், வணிக வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்த வி.எஸ்.குறிஞ்சிசெல்வன் உள்ளிட்ட 20 பேர் நேரில் ஆஜராகினர்.
அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல், குட்கா முறைகேடு வழக்கில் விசாரணை நிறைவடைந்து விட்ட நிலையில் குற்றப்பத்திரிகை நகல் அனைவருக்கும் வழங்கும் வகையில் தயாராக இல்லை என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை 23-ந் தேதிக்கு (அதாவது இன்று) நீதிபதி தள்ளிவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. தரப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக, சுமார் 250 பக்க கூடுதல் குற்றபத்திரிகை ஆவணங்கள் என சுமார் 20 ஆயிரம் பக்கங்களை கொண்ட நகல்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் அக்டோபர் 14-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தார்.