வீடுகளில் பதுக்கிய 50 கிலோ குட்கா பறிமுதல்
சூளகிரி அருகே வீடுகளில் பதுக்கிய 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூளகிரி
கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தி வந்து வீடுகளில் பதுக்கி வைத்து இருப்பதாக ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையில் மதுவிலக்கு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அதேபகுதியை சேர்ந்த முனுசாமி மகன்கள் அசோக் (வயது28), மகேஷ்குமார் (21), மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த சந்திரன் (30) ஆகிய 3 பேரும் கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்காவை கடத்தி வந்து வீடுகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.
இதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்து சூளகிரி பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.