லாரியில் கடத்த முயன்ற ரூ.6½ லட்சம் குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து கோவைக்கு கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்த முயன்ற ரூ.6½ லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நல்லம்பள்ளி:
பெங்களூருவில் இருந்து கோவைக்கு கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்த முயன்ற ரூ.6½ லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே குறிஞ்சி நகர் சுங்கச்சாவடியில் தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனாதேவி தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து நோக்கி வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது லாரியில் ரகசிய அறைகள் அமைத்து ரூ.6.50 லட்சம் மதிப்பிலான 800 கிலோ குட்கா மூட்டை, மூட்டையாக இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவர் மற்றும் கிளீனரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வேலூர் மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்த பாயர்ஸ்அகமது (வயது 32), அதேபகுதியை சேர்ந்த கினீனர் சாதிக் (30) ஆகியோர் என்பது தெரிந்தது.
கைது-பறிமுதல்
இவர்கள் பெங்களூருவில் இருந்து கோவைக்கு கன்டெய்னர் லாரியில் குட்கா கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கன்டெய்னர் லாரியுடன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.