மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
பொள்ளாச்சி
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாஇன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இன்று கொடியேற்றம்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா தை அமாவாசை நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் நடைபெறுகிறது. மேலும் வருகிற 6-ந்தேதி ஆழியாற்றங்கரையில் மயான பூஜையும், அதை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்குதல் வருகிற 6-ந்தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடைபெறுகிறது.
வழக்கமாக அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதற்கிடையில் கொடியேற்றமும் நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொள்வார்கள். இதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
சிறப்பு பஸ்கள்
அமாவாசை நாட்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தை அமாவாசையையொட்டி குண்டம் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. இதன் காரணமாக பக்தர்கள் வசதிக்காக பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு 45 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மேலும் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து ஆனைமலைக்கு விடிய, விடிய பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சிறப்பு பஸ்கள் குறித்த தகவல் பலகை ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று மயான பூஜை, குண்டம் இறங்கும் நிகழ்ச்சிகளின் போதும் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.