கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை நகராட்சி நிர்வாக இயக்குனர் உறுதி


கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை நகராட்சி நிர்வாக இயக்குனர் உறுதி
x

கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உறுதி அளித்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் நேற்று காலை 6 மணிக்கு வருகை தந்த நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, நகராட்சி தூய்மை பணியாளர்கள் வருகைபதிவேட்டினை ஆய்வு செய்து தூய்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்வது தொடர்பாக ஆணையாளர் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு அறிவுரை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தூய்மை நகருக்கான மக்கள் இயக்கத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அவரது தலைமையில் நகரமன்ற தலைவர், துணைத்தலைவர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், நகராட்சி மண்டல பொறியாளர், ஆணையாளர், குடியிருப்புவாசிகள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் தூய்மை உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

அதன் பின்னர் 26-வது வார்டு பகுதியில் வீட்டிலேயே உரம் தயாரித்தல் தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு செயல்முறை விளக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிலே உரம் தயாரிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் எளிய முறையில் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் அந்த வார்டு குடியிருப்பு வாசிகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம்பிரித்து தரும் வகையில் நீல நிற குப்பை கூடை மற்றும் பச்சை நிற குப்பை கூடைகளை இலவசமாக வழங்கினார்.

அதன் பின்னர் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு காணொலிகாட்சி மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்த கூடிய மாற்றுப்பொருட்கள் தொடர்பான கண்காட்சி குடிலை பார்வையிட்டு அங்கு இருந்த தன்னார்வலர்களிடம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எளிய முறையில் விளக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

நகராட்சி 2-வது வார்டில் நடைபெற்று வரும் ராகவேந்திரா காலனி, பூங்கா பணியை பார்வையிட்டு அதில் சில மாற்றங்களை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர் நகராட்சியில் பசுமை உரக்குடில் அமைக்க ஏதுவாக வள்ளலார் நகர் பூங்கா மற்றும் நந்திவரம் காலனி ஆதிதிராவிடர் மயானத்தை பார்வையிட்டார்.

பின்னர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எரிவாயு தகன மேடை அமைக்கப்படவுள்ள கன்னியப்பா நகர் மயானம் மற்றும் நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ள கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள இடத்தில் அறிவுசார் நூலகம் கட்டப்பட உள்ள இடத்தை பார்வையிட்டார். அதன் பின்னர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ள நந்தீஸ்வரர் தாங்கல் குளத்தை பார்வையிட்டு புனரமைப்பு திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து மழை காலங்களில் அதிக அளவில் மழைநீர் தேங்கும் மகாலட்சுமி நகரை பார்வையிட்டு அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக நகரமன்ற தலைவரிடம் உறுதியளித்தார்.

ஆய்வின்போது நகரமன்ற தலைவர் நகராட்சியில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறைக்கு காரணமான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளால் சேதமடைந்துள்ள பாலாறு கூட்டுகுடிநீர் திட்ட குழாய்களை உடனடியாக சரிசெய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடவடிக்கை எடுக்குமாறும், நகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய சில பணிகள் குறித்தும் நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் மனு அளித்தார்.

ஆய்வின் போது நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக், நகர மன்ற துணைத்தலைவர் வக்கீல் லோகநாதன் உள்பட பலர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து மறைமலைநகர் நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மறைமலைநகர் நகரமன்ற தலைவர் சண்முகம், துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story