ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா?
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு தலைவர் தெரிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி.
வரி விதிப்பு என்பது மன்னர் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு வருகிறது. மக்கள் செலுத்தும் வரி மட்டும் இல்லை என்றால், அரசுகள் செயல்படமுடியாது. வரிகளின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே அரசுகள் மக்கள் நலனுக்கான திட்டங்களை தீட்டி, செயல்படுத்துகின்றன. வரிகளை பொறுத்தமட்டிலும், நேரடி வரி மற்றும் மறைமுக வரி என்ற 2 பிரிவுகள் உள்ளன. அந்தவகையில், சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. மறைமுக வரியாகும். ஜி.எஸ்.டி. வரி முறையை உலகிலேயே முதலாவதாக 1954-ம் ஆண்டு பிரான்சு நாடு அறிமுகப்படுத்தியது.
தற்போது அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மியான்மர் உள்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜி.எஸ்.டி. வரி நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 'ஒரே நாடு, ஒரே வரி' என்ற தலைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தது. மத்திய கலால் வரி, கூடுதல் சுங்க வரி, சேவை வரி, பொழுதுப்போக்கு வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்பட வரிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட வரியாக ஜி.எஸ்.டி. இருக்கிறது.
ஒரே வரி விகிதம்
நாடு முழுவதும், மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. ஒரே மாநிலத்துக்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் அதாவது மத்திய ஜி.எஸ்.டி. (சி.ஜி.எஸ்.டி.) மத்திய அரசாலும், மாநில ஜி.எஸ்.டி. (எஸ்.ஜி.எஸ்.டி.) மாநில அரசினாலும் விதிக்கப்படுகிறது. அதன் வருவாயை மத்திய-மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. மாநிலங்களுக்கிடையே நடைபெறும் பரிவர்த்தனைகள் மற்றும் சரக்கு அல்லது சேவை இறக்குமதிக்கு, ஒருங்கினைந்த ஜி.எஸ்.டி. (ஐ.ஜி.எஸ்.டி.) மத்திய அரசினால் விதிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி.யை பொறுத்தமட்டில், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய 4 நிலைகளில்(சிலாப்ஸ்) வரி விதிக்கப்படுகிறது. தற்போதைய வரி விதிப்பு முறை என்பது, சேவை துறைகளுக்கு கட்டுமான உருவாக்கத்துக்கான நிதி தேவையை பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு இருப்பதால், ஜி.எஸ்.டி.யில் ஒரே நிலையில் அதாவது விலக்கு எதுவும் இல்லாமல் ஒரே விகிதத்தில்(ஒரே சிலாப்) வரி விதிப்பினை கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய் சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார்.
சாத்தியமா?
ஜி.எஸ்.டி. என்பது 'ஒரே நாடு ஒரே வரி' என்ற அடிப்படையில் உருவானது. நாடு முழுவதும் ஒரே சீராக வரி விதிக்கப்படும் அதில், வரி விகிதங்களில் சில பிரிவுகள் இருக்கின்றன. பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவரின் கருத்து ஏற்கப்பட்டால், 'ஒரே நாடு ஒரே வரி' என்ற நிலையில் இருந்து 'ஒரே நாடு, ஒரே வரி, ஒரே வரி விகிதம்' என்ற நிலைக்கு ஜி.எஸ்.டி. மாறிவிடும். 'ஒரே ஜி.எஸ்.டி., ஒரே வரி' என்ற முன்மொழிவு சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொன் முட்டையிடும் வாத்து
செல்வக்குமார் (தலைவர், தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு) :- அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். 5, 12, 18 மற்றும் 28 ஆகிய சதவீதங்களில் வரி இல்லாமல், அதை ஒருநிலைப்படுத்தி, ஒரே வரியாக இருந்தால் வணிகம் செய்ய உதவியாக இருக்கும். பல விகிதத்தில் வரி உள்ளதால் அதை பிரித்து கணக்கு காண்பிப்பதில் சிரமமாக உள்ளது. மற்ற மாநிலங்களை விடவும் தமிழகத்தில் அதிகமான வரி வருவாய் கிடைக்கிறது. அதை கெடுத்துக் கொள்ளாமல், ஒரே வகையான வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும். அவ்வாறு வந்தால் யாரும் வரி ஏய்ப்பு செய்ய மாட்டார்கள். வரியை கூட்ட, கூட்ட வணிகர்களை சார்ந்த பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த வரி விகிதத்தை குறைத்தால் பொருட்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளது. அதன் மூலம் அரசுகளுக்கும் நன்மதிப்பு கிடைக்கும். வணிகர்கள் என்பவர்கள் பொன் முட்டையிடும் வாத்து போன்றவர்கள். அதை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரே அறுவடையாக அறுத்துக் கொள்ளக்கூடாது. அதிகப்படியான வரி விதிப்பு என்பது, பொன் முட்டைகளுக்கு ஆசைப்பட்டு வாத்தை அறுப்பதற்கு சமமானது.
சங்கரநாராயணன் (வர்த்தகர், தேனி) :- ஜி.எஸ்.டி. வரி விதிப்பை இன்னும் ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை உள்ளது. அதிகப்படியான வரி விதிப்பு, பல்வேறு வகையான வரி விதிப்பால் வரி ஏய்ப்புகள் நிறைய நடக்கிறது. முறையாக வரிசெலுத்தி வியாபாரம் செய்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வணிகத்தில் முதலீடு போக 10 சதவீதம் லாபம் பெறுவதே பெரிய விஷயமாக உள்ளது. அதில், 18 சதவீதம் வரி கட்ட வேண்டும் என்றால் தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும். ஒரே நாடு, ஒரே வரி என்பது போல், ஒரே விகிதத்தில் வரி வர வேண்டும். மொத்தத்தில் 5 சதவீத வரி என்ற நிலைமைக்கு வந்தால், அனைத்து வணிகர்களும் வரி செலுத்தும் நடைமுறைக்கு வந்து விடுவார்கள். முறையற்ற வணிகம் தவிர்க்கப்படும். சிறு, குறு தொழில்களும் மேம்படும்.
கணக்கு காட்டுவதில் சிரமம்
கமால் பாட்ஷா (வியாபாரி, கம்பம்):- மளிகை பொருட்களுக்கு எல்லாம் ஒரே மாதிரியான வரியாக இருந்தால் மொத்தமாக வாங்கி, சில்லரையில் விற்பனை செய்யும் போது பாதிப்பு இருக்காது. எவ்வளவு கொள்முதல் செய்கிறோம், எவ்வளவு விற்பனை செய்கிறோம் என்பதை கணக்கிட்டு அதற்கான ஜி.எஸ்.டி. வரியையும் கணக்கிட்டு செலுத்தி விடுவோம். வெவ்வேறு வரி விதிப்பாக உள்ளதால் ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வதற்கு கணக்கீடு செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது. இதனால், தொழில் பாதிக்கப்படுகிறது. ஒரே விகிதத்தில் வரியாக இருந்தால் கணக்கீடு செய்வதில் பாதிப்போ, குழப்பமோ ஏற்படாது. தற்போது பெட்ரோலிய பொருட்களை விடவும் சமையல் எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தில் உள்ளது. இதனாலும் பாதிப்பு ஏற்படுகிறது.
குலாம்நத்தர் (பொருளாதார நிபுணர், உத்தமபாளையம்) :- ஜி.எஸ்.டி. கவுன்சில் அளிக்கும் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அதற்கு ஏற்றார் போல் வரிகளை விதிப்பது வழக்கம். அதன்படி இறுதியாக நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மக்காச்சோளம், அரிசி, கோதுமை ஆகியவைகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கிறது. இந்த அறிவிப்பில் பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படும் அரிசி மற்றும் இதர பொருட்களுக்கு 5 சதவீதம் வரி விதிப்பு என்றும், சில்லறையாக விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு வரி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் 5 கிலோ 10 கிலோ என பேக்கிங் மூலமாகவோ அரிசி கோதுமை போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பினை நீக்க வேண்டும். பல்வேறு அடுக்குகளாக உள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ஒழுங்குபடுத்தி, வணிகம் பாதிக்காத வகையில் ஒரே விகிதத்தில் வரியை அமல்படுத்தினால், வரி ஏய்ப்பு தவிர்க்கப்படும். வரியை குறைத்து, அதை வசூலிப்பதில் கடுமையான போக்கை காட்டினால், அனைத்து வணிகர்களும் வரி விதிப்பு வட்டத்துக்குள் வந்து விடுவார்கள். அனைத்து வணிகமும் வரி விதிப்புக்குள் வந்து விட்டால், அரசுக்கான வருவாய் அதிகரிக்கும். குறைந்த நபர்கள் அதிக வரியை செலுத்துவதை விட, அதிக நபர்கள் சராசரியான வரியை செலுத்தினால் அது நீடித்த, நிலையான வளர்ச்சியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.