விழுப்புரம் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 6,621 பேர் எழுதினர் கலெக்டர் மோகன் பார்வையிட்டார்
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 6,621 பேர் எழுதினர். இத்தேர்வை கலெக்டர் மோகன் பார்வையிட்டார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை ஆட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான குரூப்-1 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இத்தேர்வு விழுப்புரம் தாலுகாவிற்குட்பட்ட 23 மையங்களில் நடந்தது. இத்தேர்வை எழுதுவதற்காக 10,926 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 6,621 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 4,305 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாற்றுத்திறனாளி தேர்வர்கள் எந்தவித சிரமமும் இன்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாக தரைத்தளத்தில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு தேர்வு எழுதினர்.
வாக்குவாதம்
தேர்வு சரியாக காலை 9.30 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணிக்கு முடிவடைந்தது. முன்னதாக ஏற்கனவே அறிவுறுத்திய படி 9 மணிக்குள் வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், விழுப்புரம் நகரில் உள்ள சில தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்காக காலை 9 மணிக்கு பிறகு தேர்வர்கள் வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்ளே அனுமதிக்காததால் போலீசாரிடம் அவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அரசு அதிகாரிகள் அங்கு வந்து அரசுப்பணியாளர் தேர்வாணைய விதிமுறையை சுட்டிக்காட்டிய பின்னர் அவர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
முறைகேடுகளை தடுக்க துணை ஆட்சியர் நிலையிலான 2 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர நடமாடும் குழுக்களில் ஒரு குழுவிற்கு தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
இத்தேர்வையொட்டி தேர்வர்கள் எளிதாகவும், உரிய நேரத்திலும் தேர்வு மையத்திற்கு வருவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
கலெக்டர் பார்வையிட்டார்
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி தேர்வு மையத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.