நிலக்கடலை அறுவடை பணி தீவிரம்
பொறையாறு அருகே காழியப்பட்டு ஊராட்சியில் நிலக்கடலை சாகுபடி செய்த வயல்களில், அறுவடை பணிகள் நடந்துவருகிறது. நஷ்டம் ஏற்படுகிறது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொறையாறு:
பொறையாறு அருகே காழியப்பட்டு ஊராட்சியில் நிலக்கடலை சாகுபடி செய்த வயல்களில், அறுவடை பணிகள் நடந்துவருகிறது. நஷ்டம் ஏற்படுகிறது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நிலக்கடலை சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயம் மற்றும் அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல்,பருத்தி,உளுந்து,கரும்பு, வாழை,நிலக்கடலை,மக்காச்சோளம்,கம்பு,மரவள்ளிக்கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு, கேழ்வரகு மற்றும் காய்கறி வகையான மிளகாய்,வெண்டைக்காய்,கொத்தவரை, கத்தரி,பாவை,புடலை,பீர்க்கங்காய் உள்ளிட்டவைகளை பருவநிலைக்கு தகுந்தாற்போல் சாகுபடி செய்து வருகின்றனர்.
பொறையாறு அருகே காழியப்பநல்லூர் ஊராட்சி சுற்றுவட்டார பகுதியில் மணல் பாங்கான இடத்தில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து உள்ளனர். நிலக்கடலை சித்திரை, ஆடி, கார்த்திகை ஆகிய 3 பட்டங்களாக பிரித்து, சாகுபடி செய்து வருகின்றனர்.
அறுவடை பணிகள்
சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்து உள்ளனர். தற்போது காழியப்பநல்லூர் ஊராட்சி கண்ணப்பமூளை, பத்துக்கட்டு, அனந்தமங்கலம், ஆணைக்கோவில், என்.என்.சாவடி, ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்த நிலக்கடலையை, விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயி பிரபாகரன் கூறுகையில், காழியப்பநல்லூர் ஊராட்சியில் 90 சதவீதம் நிலக்கடலை விவசாயதொழில் தான் செய்து வருகிறோம். கார்த்திகை பட்டம் நிலக்கடலை சாகுபடி செய்து இருந்தோம்.
கூடுதல் செலவு
தற்போது அறுவடை பணியை தொடங்கி உள்ளோம். நிலக்கடலை 90 நாட்கள் பயிராகும். தற்போது பனி குறைந்து வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால் மகசூல் குறைந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் மயில்கள் கூட்டம் கூட்டமாக வந்து நிலக்கடலை பருப்பை சாப்பிட்டு செல்கிறது.
இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் காவலுக்கு ஆட்கள் வைத்து பராமரிப்பு செய்தால் கூடுதல் செலவாகிறது. நிலக்கடலையை எண்ணெய்க்காகவும், கடலைமிட்டாய், சாக்லேட் போன்ற தின்பண்டம் தயாரிக்கவும் வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.