நிலக்கடலை அறுவடை பணி
காழியப்பநல்லூர் பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காழியப்பநல்லூர் பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயம், மீன்பிடி தொழில்
தரங்கம்பாடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் விவசாயமும், மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல், பருத்தி, உளுந்து, சீனிகரும்பு, செங்கரும்பு, வாழை, நிலக்கடலை, எள், மக்காச்சோளம், கம்பு, மரவள்ளி கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு, கேழ்வரகு, பனங்கிழங்கு மற்றும் மிளகாய், வெண்டை, பாவை, கொத்தவரை, கத்தரிக்காய் புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், நாட்டு முள்ளங்கி, மனத்தக்காளி கீரை, தண்டு கீரை, அரைக்கீரை, முளைக்கீரை, முருங்கை கீரை மற்றும் காய், புளிச்ச கீரை, வெந்தயக்கீரை உள்ளிட்டவைகளை சீசனுக்கு ஏற்றது போல் சாகுபடி செய்து வருகின்றனர்.
நிலக்கடலை சாகுபடி
காழியப்பநல்லூர் தில்லையாடி, திருவிடைக்கழி, சிங்கானோடை, ஆணைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கார்த்திகை, ஆடி, சித்திரை ஆகிய 3 பட்டங்களாக பிரித்து சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். தற்போது காழியப்பநல்லூர், சிங்கானோடை, பத்துக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆடி மாதம் பட்டம் விதைப்பு செய்த நிலக்கடலையை விவசாயிகள் மும்முரமாக அறுவடை செய்து வருகின்றனர்.
மகசூல் குறைவு
இதுகுறித்து காழியப்பநல்லூர் பகுதி விவசாயி சொக்கலிங்கம் கூறுகையில், ஆடி பட்டம் நிலக்கடலையை தற்போது அறுவடை செய்து வருகிறோம். நிலக்கடலை மகசூல் குறைந்துள்ளது. செடிகளில் கடலை குறைந்தது உள்ளது. ஒரு ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டைகள் வரை கிடைக்கும். ஆனால் நிலக்கடலை 1 ஏக்கருக்கு 20 மூட்டைகள் கூட கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர் என்றார்.