நிலக்கடலை சாகுபடி பணி தீவிரம்
பொறையாறு அருகே நிலக்கடலை சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொறையாறு:
பொறையாறு அருகே நிலக்கடலை சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய தொழில்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதியில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக மீன்பிடி தொழில் உள்ளது.இப்பகுதி விவசாயிகள் நெல், பருத்தி, உளுந்து, பயறு வகைகள், செங்கரும்பு, சீனிக்கரும்பு, வாழை, நிலக்கடலை, எள், சோளம், கம்பு, மரவள்ளி கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு, கேழ்வரகு ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.
நிலக்கடலை சாகுபடி பணி
தற்போது காழியப்பநல்லூர், ஆணைக்கோவில், திருக்கடையூர், பத்துக்கட்டு, சிங்கனோடை, உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை மாதப்பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.இதுகுறித்து பத்துக்கட்டு பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறுகையில் கார்த்திகை, ஆடி, சித்திரை ஆகிய மூன்று பட்டங்களாக பிரித்து நிலக்கடலை சாகுபடி செய்து வருகிறோம்.
கொள்முதல் நிலையம்
நிலத்தில் ஏர் உழுது, இயற்கை உரமிட்டு நிலக்கடலையை விதைத்து வருகிறோம். ஆட்கள் மற்றும் கை எந்திரம் மூலம் விதைப்பு செய்து வருகிறோம். நிலக்கடலை 90 நாட்கள் பயிராகும். அரசு வேளாண்மைத்துறை சார்பில் ஜிப்சம், உரங்கள், நுண்ணூட்டச் சத்து தரமான சான்று அளிக்கப்பட்ட நிலக்கடலை விதைகளை மானிய விலையில் வழங்க வேண்டும்.அப்படி வழங்கினால் இப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடியில் தீவிரமாக ஈடுபடுவார்கள். அதைபோல நிலக்கடலைக்கு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மற்றும் விவசாய கமிட்டி அமைத்து அரசே நிலக்கடலையை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.