கீழடி அகழ் வைப்பக திறப்பு விழா ஏற்பாடுகள்-அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி திறந்து வைக்கும் கீழடி அகழ் வைப்பக திறப்பு விழா ஏற்பாடுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு செய்தார்.
திருப்புவனம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி திறந்து வைக்கும் கீழடி அகழ் வைப்பக திறப்பு விழா ஏற்பாடுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு செய்தார்.
கீழடி அகழ் வைப்பகம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு நடந்து பல்லாயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவற்றை காட்சிப்படுத்த அகழ் வைப்பகம், 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு இருக்கிறது. பழமை மாறாமல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏற்ப பணிகள் நடந்து முடிந்துள்ளன.
செட்டிநாடு கட்டுமான பாணியில் கட்டப்பட்ட இந்த அகழ் வைப்பகத்தை வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), நேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். காட்சிப்படுத்தப்பட்டுள்ள கீழடி அகழாய்வு பொருட்களையும் பார்வையிடுகிறார்.
அமைச்சர் ஆய்வு
இதையொட்டி அங்கு நடைபெறும் விழா ஏற்பாடுகளை தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி சென்றிருந்தார்.
ஆய்வுக்குப்பின் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
சங்ககால தமிழர்களின் புகழை பறைசாற்றும் வகையில், பல்வேறு நாடுகள் வியக்கும் வகையில், வரலாற்றுப் பக்கங்களில் தமிழகம் சிறப்பாக இடம் பெறுகின்ற வகையில் கீழடியில் இந்த அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தினார்.
சிவகங்கை மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க அம்சங்கள் கொண்ட மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. கீழடி அகழாய்வு பணிகளின் போது கிடைக்க பெறும் தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அப்பொருட்களை இங்கு வந்து பொதுமக்கள் பார்த்து, அறிந்து கொள்வதற்காக, செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் அகழ் வைப்பகம் அமைந்துள்ளது.
வருகிற 5-ந் தேதி நேரடியாக இங்கு வந்து, அகழ் வைப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பெருமை சேர்க்க உள்ளார். அதற்கென நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நடைபெற்று வரும் பணிகளை சிறப்பான முறையில் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம், கீழடி கட்டிட மையம் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் மணிகண்டன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.