மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி அரிசிகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை
ரசாயன உரங்கள் இன்றி இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி அரிசிகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்துறைப்பூண்டியில் நடந்த தேசிய நெல் திருவிழாவில் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
திருத்துறைப்பூண்டி:
ரசாயன உரங்கள் இன்றி இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி அரிசிகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்துறைப்பூண்டியில் நடந்த தேசிய நெல் திருவிழாவில் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
தேசிய நெல் திருவிழா
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவின் 2-வது நாளாக நேற்று நெல் திருவிழா மற்றும் உணவு திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆர். எஸ். பாண்டியன், தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ., மாரிமுத்து எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் சக்கரபாணி பேசும் போது கூறியதாவது:-
ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு
விவசாயத்திற்காக தமிழக முதல்-அமைச்சர் ரூ.400 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். மேலும் விவசாயிகளுக்கு அனைத்து இடு பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் 350 அரவை மில்கள் செயல்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 450 அரவை மில்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் உடனடியாக அரவைக்கு கொண்டு செல்லப்படுவதால், நெல் மூட்டைகள் திறந்த வெளியில் இருந்து வீணாகாமல் அரசுக்கும், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.
புவிசார் குறியீடு
ரசாயன உரங்கள் இன்றி இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் மாப்பிள்ளைச்சம்பா, சீரகச்சம்பா, யானைக்கவுனி, கருப்புக்கவுனி உள்ளிட்ட பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும்.
இந்த புவிசார் குறியீடு கிடைத்தால் கள்ளச்சந்தையில் பொருட்கள் விற்பனையாகாமல் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சி
விழாவில் கலந்து கொண்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த விவசாயிகளுக்கு 2 கிலோ நெல் விதைகளை வழங்கி, அடுத்த ஆண்டில் 4 கிலோ நெல் விதைகள் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த பெண்களால் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை அமைச்சர் சக்கரபாணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள். பார்வையிட்ட உணவுகளை சுவைத்து பார்த்தனர். அதில் சிறப்பாக இயற்கை உணவை தயாரித்த மூன்று பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.