மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம்
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம் நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட உதவி அலுவலர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப்கிறிஸ்துதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு மாதாந்திர உதவித்தொகை, திருமண உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, உதவி உபகரணங்கள், நூறுநாள் வேலை திட்ட அடையாள அட்டை, அத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வருபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். மொத்தம் 70 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை பெற்ற அதிகாரிகள், மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர்.