பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு


பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 July 2023 1:45 AM IST (Updated: 12 July 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் மழை காரணமாக பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் தேயிலை அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் மழை காரணமாக பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் தேயிலை அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பச்சை தேயிலை

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதை நம்பி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகள், தேயிலை தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளனர். கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் போதுமான மழை பெய்ததாலும், இதமான சீதோஷ்ண காலநிலை நிலவி வருவதாலும் தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகளில் தற்போது கொழுந்துகள் வரத்து அதிகரித்து வருகிறது.

தற்போது பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.15 என தேயிலை வாரியம் நிர்ணயித்து உள்ளது. இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. கொள்முதல் விலை குறைவாக இருப்பினும், தற்போது தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது.

இதனால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர். இந்தநிலையில் தேயிலை பறிப்பதற்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தேயிலை கொழுந்துகளை கையால் அறுவடை செய்யும் எந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர்.

அறுவடை

மேலும் விவசாயிகள் பேட்டரியால் இயங்கும் மோட்டார் மூலம் அறுவடை செய்யும் எந்திரம், விரைவாக தேயிலை அறுவடை செய்யும் அதி நவீன எந்திரங்களையும் பயன்படுத்தி அறுவடை செய்து வருகின்றனர். பெரிய தேயிலை எஸ்டேட் உரிமையாளர்கள் மோட்டார் மற்றும் காற்றால் இயங்கக்கூடிய அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 300 கிலோ வரை பச்சை தேயிலையை அறுவடை செய்கின்றனர். இதேபோல் சிறு தேயிலை விவசாயிகள் கைகளால் இயக்கும் கத்தரிக்கோல் வடிவிலான எந்திரம் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட எந்திரங்களை பயன்படுத்துகின்றனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, சாதாரணமாக பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளி ஒருவர் ஒரு நாளில் அதிகபட்சமாக 50 கிலோ தேயிலையை பறிக்க முடியும். கை அறுவடை எந்திரங்கள் மூலமாக அறுவடை செய்யும் போது 200 முதல் 250 கிலோவும், நவீன அறுவடை எந்திரங்கள் மூலம் 300 கிலோ வரையும் அறுவடை செய்ய முடிகிறது என்றார்.


Next Story