வடகாட்டில் பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி
வடகாட்டில் பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி அடைந்தது. கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
பச்சை மிளகாய்
வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாங்காடு, அனவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல், கீரமங்கலம், குளமங்கலம், மேற்பனைக்காடு, பனங்குளம், கொத்தமங்கலம், மறமடக்கி, ஆலங்காடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பச்சை மிளகாய் செடிகளை தங்களது எலுமிச்சை, தென்னந்தோப்புகளில் ஊடு பயிராகவும், தனிப்பயிராகவும் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தற்போது பச்சை மிளகாயின் வரத்து அதிகரித்து வருவதால் பச்சை மிளகாய் கிலோ ரூ.20-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு சரக்கு வாகனம் மூலமாக திருச்சி, மதுரை, கோவை போன்ற ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
விலை வீழ்ச்சி
இதுகுறித்து வடகாடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. தற்போது வேளாண் இடுபொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளால் விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.
இந்தநிலையில் பச்சை மிளகாய் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறோம். தற்போதைய விலை கூலிக்கு கூட கட்டுப்படியாகவில்லை. இதனால் நாங்களே கொஞ்சம் கொஞ்சமாக பச்சை மிளகாய்களை பறித்து விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.