பசுமை சாம்பியன் விருது வழங்கும் விழா


பசுமை சாம்பியன் விருது வழங்கும் விழா
x

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பசுமை சாம்பியன் விருது வழங்கும் விழா நடந்தது

தேனி

தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் திறமையாகவும், அர்ப்பணிப்புடனும் சிறப்பாக பணியாற்றும் 100 பேருக்கு ஆண்டுதோறும் பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், தேனி மாவட்டத்தில் விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையிலான குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு விருதுக்கு தகுதியான நபர்கள் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இதையடுத்து கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரிக்கும், உத்தமபாளையத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் செந்தில்குமாருக்கும் பசுமை விருது அறிவிக்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழா, உலக சுற்றுச்சூழல் தினமான இன்று க.விலக்கில் இருந்து வைகை அணை செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் மில்லில் நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பசுமை விருது மற்றும் தலா ரூ.1 லட்சம் பரிசு தொகைக்கான காசோலை ஆகியவற்றை வழங்கி பாராட்டினார். பின்னர் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை கலெக்டர் நடவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கூடுதல் பொறுப்பு) ராமராஜ், உதவி பொறியாளர் சுகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story