குழுக்கள் அமைத்து தொழில் தொடங்க மானியம்
திண்டுக்கல் மாவட்ட தொழில் மையத்தில் தொழில் குழுமம் மேம்பாடு தொடர்பான கருத்தரங்கு நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட தொழில் மையத்தில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் டி.ஐ.சி.சி.ஐ. அமைப்பு சார்பில் தொழில் குழுமம் மேம்பாடு தொடர்பான கருத்தரங்கு நடந்தது. இதற்கு மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் கமலகண்ணன் தலைமை தாங்கினார். டி.ஐ.சி.சி.ஐ. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் வரவேற்றார். இதில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், தொழில்நுட்ப வல்லுனர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.அப்போது குழுக்கள் அமைத்து தொழில் தொடங்கினால்வழங்கப்படும் மத்திய, மாநில அரசுகளின் மானியம், குழுக்கள் செயல்பாடுகள் தொடர்பாக பேசினர்.
மாவட்ட தொழில் மைய உதவிஇயக்குனர் நாகராஜன் பேசுகையில், உணவு உற்பத்தி தொழில், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, கயிறு தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது. எனவே தொழில் முனைவோர் குழுவாக சேர்ந்து தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று கூறினார். இதில் டி.ஐ.சி.சி.ஐ. மாநில துணை தலைவர் அரவிந்த்குமார், சிறுதொழில் மைய இயக்குனர் ஜோசப்மார்ட்டின் மற்றும் ஏராளமான தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.