நவராத்திரி விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலு
நவராத்திரி விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம்,
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 22 அடி உயரத்திலும், 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் சிறிய பொம்மைகள் முதல் பெரிய பொம்மைகள் வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் கொலுவில் வைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன்பு ஊஞ்சலில் சிவகாமசுந்தரி அம்பாளை எழுந்தருள செய்து, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற இருக்கிறது. அந்த வகையில் நவராத்திரி தொடக்க விழாவான நேற்று கொலு முன்பு அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததுடன், கொலுவை கண்டு ரசித்துச் சென்றனர். இந்தவிழாவுக்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.