படியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
படியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
காங்கயம்
காங்கயம் ஒன்றியம், படியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் கலந்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஊராட்சி ஒன்றியம், படியூர் ஊராட்சி ஆரம்ப பள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் எஸ்.வினித் கலந்து கொண்டார்.
அப்போது கலெக்டர் எஸ்.வினீத் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு முறையும் தங்கள் பகுதியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்து செயல்படும்போது அந்த ஊராட்சியின் அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபை கூட்டம் ஊன்றுகோலாக அமைகின்றது. ஊராட்சி அளவில் மகளிர் திட்டம் மூலமாக செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது. குழுக்கள் மிகவும் குறைவாக உள்ளதால் மேலும் குழுக்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழுக்கள் அமைக்க வட்டார அளவில் மற்றும் ஊராட்சி அளவிலான அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். ஒரு குழுக்களுக்கு 12 நபர்கள் இருந்தால் போதும் அவ்வாறு குழுக்கள் அமைக்கும் போது 1 லட்சம் முதல் கடனாக வழங்கப்படுகிறது.
கிராமங்களில் உள்ள ஏரி, வாய்க்கால், குளம், கால்வாய்கள் தூர்வாருதல் மற்றும் பண்ணை குட்டை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இன்றைய தினம் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றியும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்தும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் 2023-24 தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல்ஜீவன் இயக்கம் மற்றும் இதர பொருட்கள் என கிராமசபை கூட்டத்தில் மேற்கண்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய நிதியாக ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டில் காசோலையையும், புதிய வங்கி கணக்கு புத்தகங்களையும், வேளாண்மை துறை சார்பில் ரூ.4 ஆயிரத்து 500 மதிப்பீட்டில், ரூ.2 ஆயிரம் மானியத்தில் விசைத் தெளிப்பானையும், மாவட்ட கலெக்டர் எஸ் வினீத் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இந்த கூட்டத்தில் இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், தாராபுரம் கோட்டாட்சியர் குமரேசன், முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.மகேஷ்குமார், படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவேந்திரன், நிர்மலா, மாற்றுத்திறனாளின் நலத்துறை அலுவலர் முருகேசன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.