போலீசார் பாதுகாப்போடு மீண்டும் கிராம சபை கூட்டம்
கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் அதிகாரிகள் மற்றும் போலீஸ் பாதுகாப்போடு நடைபெற்றது.
தாராபுரம்
கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் அதிகாரிகள் மற்றும் போலீஸ் பாதுகாப்போடு நடைபெற்றது.
கிராம சபை கூட்டம்
தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடை பெறவில்லை. அன்றைய தினம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் கிராம சபைக் கூட்டத்துக்கு வரவில்லை. அதனால் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் தலைவர் இல்லாமல் கிராம சபை நடத்தக் கூடாது என கூறி கிராம சபைக்கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். அப்போது அதிகாரிகள் வேறொரு நாளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்போடு கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நேற்று முன்தினம் அலங்கியம் சாலை திரு.வி.க நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை நாச்சிமுத்து, வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி நாகராஜ், நர்மதா ஈஸ்வரன், குப்புசாமி, புனிதா கார்த்திக் செல்வன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது கிராம ஊராட்சி தீர்மானத்தை ஊராட்சி மன்ற தலைவர் வாசிக்க தொடங்கினார். அப்போது கொண்டரசம்பாளையத்தை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் நீண்ட நாட்களாக தெரு விளக்கு எரிவதில்லை எனவும், பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
கலைந்து சென்றனர்
அதே போல் வினோபாநகர் மற்றும் கவுண்டச்சிபுதூர் 1 முதல் 9 வரை உள்ள வார்டுகளில் குடிநீர் தொட்டி தூய்மைப்படுத்துவதில்லை மற்றும் தெரு குழாய்களில் தண்ணீர் வருவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய ஊராட்சி மன்ற தலைவி பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.இதனால் ஆத்திரமற்ற கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
சுதந்திர தின விழாவை ஒட்டி நடந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.