காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆய்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர்,எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.
கொரடாச்சேரி:
கிராமசபை கூட்டம்
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆய்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கிராமசபை கூட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு கிராம வளர்ச்சிக்கு தேவையான கருத்துகளை வழங்கி, கோரிக்கைகளை தெரியப்படுத்திட வேண்டும். இப்பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான பஸ் நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள் விரைவில் ஏற்படுத்தி தரப்படும். மேலும் ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
தூய்மை பணி
தூய்மையே சேவை இயக்கம் மூலம் கடந்த இரண்டு வாரமாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் இணைந்து அவரவர் வசிக்கும் பகுதியினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் வேளாண்மைத்துறை, கால்நடைப்பராமரிப்புத்துறை, மகளிர் திட்டம், மீன்வளத்துறை, சுகாதாரத்துறை, ஊரகவளர்ச்சித்துறை சார்ந்த அலுவலர்கள் அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினர்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) வடிவேல், கொரடாச்சேரி ஒன்றியக்குழு தலைவர் உமாபிரியா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், ஒன்றியக்குழு உறுப்பினர் கவிதா, ஆய்க்குடி ஊராட்சிமன்ற தலைவர் மாதாதேவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.