காந்தி ஜெயந்தி அன்றுஅனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் :பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள கலெக்டர் வேண்டுகோள்
காந்தி ஜெயந்தி அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கடலூர் மாவட்டத்தில் காந்திஜெயந்தி அன்று (அக்டோபர் 2-ந்தேதி) காலை 11 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றியும், மதசார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தாமல் பொதுவான இடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் நடத்த வேண்டும்.
கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே ஊராட்சி பொதுமக்களுக்கு தெரியப் படுத்தி நடத்த வேண்டும் என்று அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ஆகவே இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.