385 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு 385 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. பாரப்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டார்.
கிராம சபை கூட்டம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.
அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
கலெக்டர் பங்கேற்பு
பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாரப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) தமிழரசி, தெற்கு தாசில்தார் செல்லதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியேந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சுரேஷ்குமார், பாரப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் இந்திராணி மற்றும் துணைத் தலைவர் உமாசங்கர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.