241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 21 March 2023 12:15 AM IST (Updated: 21 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.

மயிலாடுதுறை

தண்ணீர் தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -

தண்ணீர் தினம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளிலும் நாளை (புதன்கிழமை) தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது.

இந்த கிராம சபை கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவினம், 2022-23-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம் குறித்து விவாதித்தல், சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ஜல்ஜீவன் திட்டம்

மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊரக நீர்நிலைகளின் விவரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு, தனியார் சார்ந்த அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவதற்கான பயன்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளுக்கு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. . நீர் சேமிப்பு பணிகள் எடுக்கப்பட்டவை, அதனால் ஏற்பட்டுள்ள பலன்கள் மற்றும் 2023-24-ம் ஆண்டு தேவைப்படும் நீர் சேமிப்பு பணிகள், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கணக்கெடுப்பு, சிறுதானிய உற்பத்தி மற்றும் அதன் நன்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பான விவரங்களை கூட்டத்தில் விவாதித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story