மன்னர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
மன்னர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 824 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவர் பேசுகையில், ''கல்லூரியில் பட்டமளிப்பு விழா அரங்கை அடுத்த ஆண்டிற்குள் குளிர்சாதன வசதியுடன் மாற்றப்படும். பட்டம் பெற்றவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளனர். உங்கள் வாழ்வில் பல திருப்பங்கள், தடங்கல்கள், வெற்றிகள் வரலாம். ஆனால் அத்தனையும் கடந்து செல்ல வேண்டும். கடினமான படிகளை தாண்டி செல்லும் போது வெற்றி எனும் மாபெரும் இலக்கை அடைய முடியும். களத்தில் நம்மால் எதுவும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியோடு, அன்போடு, மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். நான் பொது வாழ்க்கைக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு காவல் துறை வழக்கு கூட என் மீது இல்லை. நாம் அறிவை பயன்படுத்தி செய்கின்ற செயல் வெற்றியை தரும். நீங்கள் சாதனை படைத்து வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும். எதிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து அறிவாற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். அதிகமாக செல்போன் பயன்படுத்துவது, மற்ற கவனங்களில் ஈடுபடுவதை தவிர்த்து படித்து, நம்மை பார்த்து மற்றவர்கள் பின்தொடரும் வகையில் இருக்க வேண்டும்'' என்றார். விழாவில் மாணவ-மாணவிகள், பேராசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.