கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்
கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி விரைவில் பொருத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
ஜி.பி.எஸ். கருவி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது குறித்து குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசியதாவது:-
குவாரிகளில் இருந்து கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கருவி பொருத்துவதன் மூலம் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க முடியும். தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 32 உடைகல் குவாரி, 9 மண் குவாரி, 4 கிராவல் குவாரி ஆகியவற்றில் இருந்து கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும். துறை சார்ந்த அலுவலர்கள் இதனை முறையாக கண்காணிக்க வேண்டும்.
நலவாரியத்தில் பதிவு
அமைப்புசாரா தொழில்களில் ஒன்றான குவாரி தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில், காப்பீடு செய்தல், விபத்து காப்பீடு செய்தல் போன்றவற்றை தொழிலாளர் உதவி ஆணையரை தொடர்பு கொண்டு மேற்கொள்ள வேண்டும்.
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் மற்றும் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களின் விவரங்களை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விரைவில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள், குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.